Last Updated : 29 Jun, 2025 09:13 PM

 

Published : 29 Jun 2025 09:13 PM
Last Updated : 29 Jun 2025 09:13 PM

477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் - உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

கீவ்: உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கிட்டத்தட்ட இரவு முழுக்க உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன . 477 ட்ரோன்கள் மற்றும் பல்வேறு வகையான 60 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்ய - ஈரானிய ஷாஹெட்கள். உக்ரைனில் உள்ள அனைத்தையும் ரஷ்யா குறிவைத்தது. ஸ்மிலாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடமும் தாக்கப்பட்டது, இதில் ஒரு குழந்தை காயமடைந்தது. அவசர உதவிகள் தேவைப்படும் இடங்களில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலை முறியடிக்கும் போது, ​​எங்கள் எஃப்-16 விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ உயிரிழந்தார். இன்று அவர் 7 வான்வழி ஏவுகணைகளை அழித்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். அவரது மரணத்தின் அனைத்து சூழ்நிலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். கடந்த வாரத்தில் மட்டும் 114-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 1,270-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 1,100 கிளைடு குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளது.

உலக நாடுகளின் அமைதிக்கான அழைப்புகளை மீறி, புதின் நீண்ட காலத்திற்கு போரை நடத்த முடிவு செய்துள்ளார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எனவே, ரஷ்யாவின் மீது அழுத்தம் தேவை, எங்களுக்கு பாதுகாப்பும் தேவை. இதனால் பாலிஸ்டிக் மற்றும் பிற ஏவுகணைகளிலிருந்தும், ட்ரோன்களிலிருந்தும் பாதுகாக்க உக்ரைன் அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்காக அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் வாங்கத் தயாராக இருக்கிறோம். இதற்காக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் எங்கள் அனைத்து நட்பு நாடுகளின் ஆதரவையும் விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.

இரவு நடந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதல் உக்ரைன் முழுவதும் உள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்கியது என்று உக்ரைன் விமானப்படையின் தகவல் தொடர்புத் தலைவர் யூரி இஹ்னாட் தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலின் போது ட்ரோன்கள், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட சுமார் 500 வகையான வான்வழி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x