Last Updated : 29 Jun, 2025 03:46 PM

4  

Published : 29 Jun 2025 03:46 PM
Last Updated : 29 Jun 2025 03:46 PM

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்

வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் வாரங்களில் வாஷிங்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்தப் பயணம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்காக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று, “காசாவில் ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள். பணயக்கைதிகளை திரும்பப் பெறுங்கள்!!!” என்று தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்துவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்று டொனால்டு ட்ரம்ப் கூறினார். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு ட்ரம்ப் பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்காக விசாரணை வளையத்தில் உள்ள நெதன்யாகுவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து விமர்சித்த டொனால்டு ட்ரம்ப், “நெதன்யாகு இப்போது ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார், அதில் பணயக்கைதிகளை திரும்பப் பெறுவதும் அடங்கும். இஸ்ரேலிய பிரதமரை எதற்கும் இல்லாமல் நாள் முழுவதும் நீதிமன்றத்தில் உட்கார வைப்பது எப்படி சாத்தியம்.” என்று தெரிவித்தார்.

இஸ்ரேலில் அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 56,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x