Published : 29 Jun 2025 01:19 AM
Last Updated : 29 Jun 2025 01:19 AM

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் லுனி, புத்வல், திபு போஸ்ட், ஜமில் போஸ்ட், உம்ரன்வாலி, சப்ரார் பார்வர்ட், சோட்டா சாக் மற்றும் ஜங்லோரா ஆகிய இடங்களில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. தற்போது இந்த இடங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தீவிரவாத முகாம்களை கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ரேடார் மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பில் சிக்காத வகையிலும், தெர்மல் மாஸ்க் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

மேலும் புதிய தீவிரவாத முகாம்கள் கேல், சர்தி, துத்னியல், அத்முகம், ஜூரா, லிபா, பச்சிபன், ககுதா, கோட்லி, குயிராட்டா, மந்தர், நிக்கைல்,சமன்கோட் மற்றும் ஜங்கோட் என்ற இடத்தில் மலைப் பகுதிக்குள்ளும், அடர்ந்த வனப்பகுதியிலும் தீவிரவாத பயிற்சி முகாம்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதனால் இங்கு நடைபெறும் பயற்சிகளை செயற்கைகோள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாது.

தீவிரவாத முகாம்களை பெரிதாக கட்டாமல், ஐஎஸ்ஐ ஆலோசனைப்படி சிறிய சிறிய முகாம்களாக 200 தீவிரவாதிகள் மட்டும் பயிற்சி பெறும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தாக்குதல் நடத்தினால், அதிகளவிலான உயிரிழப்பை தவிர்ப்பதற்காக, பல இடங்களில் சிறிய சிறிய முகாம்களாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத முகாம்களின் பாதுகாப்பு பணியை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளவுள்ளது. புதிய தீவிரவாத முகாம்கள் அமைப்பதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையிடமாக இருக்கும் பஹவல்பூரில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தலைவர்களின் கூட்டத்தில் நடைபெற்ற உரையாடல்களை இந்திய உளவுத்துறை இடைமறித்துக் கேட்டது. அந்த கூட்டத்தில் ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர், ஹிஸ்பல் முஜாகிதீன், டிஆர்ப் மற்றும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தீவிரவாத குழுக்களை தலைமையேற்று நடத்துவது, நிதி ஆதாரங்களை பகிர்ந்து கொள்வது, பாகிஸ்தானிலும், காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது குறித்து இவர்கள் ஆலோசித்துள்ளனர். இப்பகுதியில் தீவிரவாத முகாம்கள் அனைத்தையும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ மேற்பார்வையிடவுள்ளது.

பஹவல்பூர் தியாகிகள் என்ற போஸ்டர்கள், பஹவல்பூரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இறந்த தீவிரவாதிகளுக்கு இரங்கல் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு முகமூடியுடன் துப்பாக்கி ஏந்திய நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரங்கல் கூட்டத்துக்கு வந்தவர்களை, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் முதுகில் தட்டி பாராட்டும் வீடியோக்களும் வெளியாகியுள்ளது.

உலக வங்கி மற்றும் ஆசிய வங்கியில் இருந்து பாகிஸ்தான் பெற்ற நிதி உதவிகளில் ஒரு பகுதி, தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்ட பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x