Published : 28 Jun 2025 04:30 PM
Last Updated : 28 Jun 2025 04:30 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கனிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பொதுமக்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 20=க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர், "ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ வாகனங்கள் மீது மோதியதில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். முந்தைய தாக்குதலின்போது 13 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதைவிட அதிகமாகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
"இந்த தாக்குதலில் இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. இதில், ஆறு குழந்தைகள் காயமடைந்தனர்" என்று மாவட்ட காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான்களின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப் படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை சுமார் 290 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT