Published : 28 Jun 2025 06:30 AM
Last Updated : 28 Jun 2025 06:30 AM

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்: ட்ரம்ப் சூசகம்

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சூசகமாக தெரிவித்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் வியாழக்கிழமை கூறியதாவது: சீனாவுடன் அமெரிக்கா ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது (எனினும் அதன் விவரங்களை அவர் விரிவாக கூறவில்லை). இதேபோன்றதொரு மிகப்பெரிய ஒப்பந்தம் விரைவில் இந்தியாவுடனும் கையெழுத்தாககூடும். ஆனால், நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தங்களை செய்துகொள்ளப் போவதில்லை. இருப்பினும், ஒவ்வொரு நாட்டுடனும் அமெரிக்கா மிகவும் நட்புறவுடன் உள்ளது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க வர்த்தக செயலர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், “ சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்த வார தொடக்கத்தில் இறுதி செய்யப்பட்டது. மே மாத தொடக்கத்தில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விவாதங்களை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. இருதரப்பு வர்த்தகத்தை அச்சுறுத்தும் வரி உயர்வு நடவடிக்கைகளை ஒத்திவைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன" என்றார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட வர்த்தகப் போர் இருநாடுகளையும் எதிர்மறையாக பாதித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் 0.5 சதவீதம் என்ற அளவில் சரிந்தது.

இதேபோன்று கடந்த மே மாதத்தில் சீனாவின் உற்பத்தி துறை லாபம் 9 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்தது. இதனால், வாகன உற்பத்தியாளர்கள் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்தனர். இதனை உணர்ந்தே, இருநாடுகளும் தற்போது தங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளதாக அரசியல் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x