Published : 27 Jun 2025 12:32 AM
Last Updated : 27 Jun 2025 12:32 AM
துபாய்: அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி ரகசிய இடத்தில் பதுங்கினார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 22-ம் தேதி அமெரிக்காவின் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் , ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை போட்டன. அதன்பின் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவித்தது.
அதன்பின் முதல் முறையாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் வீடியோ உரை ஈரான் டி.வி.யில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் சற்று சோர்வுடன் காணப்பட்டார். வீடியோ உரையில் அயத்துல்லா அலி கொமேனி கூறியதாவது:
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரில் தலையிடவில்லை என்றால், இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என அமெரிக்கா நினைத்தது. அதனால்தான், இதில் அமெரிக்கா தலையிட்டது. ஆனால், இந்த போரில் அமெரிக்கா சாதித்தது ஒன்றும் இல்லை. வெற்றி பெற்றது ஈரானின் இஸ்லாமிக் குடியரசுதான். அமெரிக்காவின் கன்னத்தில் நாம் அரை கொடுத்தோம்.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்திலும் தொடரலாம். மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை, தேவைப்படும்போது ஈரானால் தாக்க முடியும். இனிமேல் யாராவது அத்துமீறினால், எதிரி நாடு அதிக விலை கொடுக்க நேரிடும். இவ்வாறு அயதுல்லா அலி கொமேனி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT