Last Updated : 26 Jun, 2025 05:35 PM

2  

Published : 26 Jun 2025 05:35 PM
Last Updated : 26 Jun 2025 05:35 PM

“ஈரான் உடனான போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” - அயதுல்லா அலி கமேனி

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி | கோப்புப் படம்

தெஹ்ரான்: “இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக, இந்த போர் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "போலியான சியோனிச (இஸ்ரேல்) ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், சியோனிச ஆட்சி இஸ்லாமியக் குடியரசின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டது.

அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள். அமெரிக்கா நேரடியாகப் போரில் நுழைந்தது. ஏனெனில் அது அவ்வாறு செய்யவில்லை என்றால், சியோனிச (இஸ்ரேல்) ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அந்நாடு உணர்ந்தது. அந்த ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில், அமெரிக்கா போரில் நுழைந்தது. எனினும், எதையும் அமெரிக்கா சாதிக்கவில்லை.

அமெரிக்காவின் முகத்தில் இஸ்லாமிய குடியரசு ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உதெய்த் விமானத் தளத்தைத் தாக்கி ஈரான் சேதப்படுத்தியது. பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க மையங்களை ஈரானால் அணுக முடியும் என்பதும், அது அவசியம் என்று கருதும் போதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இதுபோன்ற நடவடிக்கை எதிர்காலத்தில் மீண்டும் நிகழலாம். ஏதேனும் தாக்குதல் நடந்தால், எதிரி நிச்சயமாக அதிக விலை கொடுக்க நேரிடும்" என தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஜூன் 13 அன்று தனது தாக்குதலைத் தொடங்கியது. ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல், உயர்மட்ட ராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகளை குறிவைத்தது. இதையடுத்து, அயதுல்லா அலி கமேனி ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு அவர் பொதுவெளியில் வரவில்லை. ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ஜூன் 22 அன்று கடும் தாக்குதலை நடத்தியது. அதன் பின் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை ஈரான் தாக்கியது. இதையடுத்து, 24-ம் தேதி போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், "அணு ஆயுதங்களை இனி ஈரானால் தயாரிக்க முடியாது. ஏனெனில், அதற்கான கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கி அழித்துவிட்டது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை என அயதுல்லா அலி கமேனி கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x