Published : 26 Jun 2025 04:40 PM
Last Updated : 26 Jun 2025 04:40 PM
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
காசா நகரத்தின் ஷேக் ரத்வான் புறநகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசிக்கும் ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (ஜூன் 26) நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல கான் யூனிஸின் தெற்கில் உள்ள ஒரு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவில் உள்ள ஒரு முக்கிய பாதையில் ஐ.நாவின் நிவாரணப் பொருட்களை வழங்கும் லாரிசுகளுக்காக மக்கள் காத்திருந்தபோது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இன்று நடந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்த உறுதிப்படுத்துதலையும் இதுவரை வழங்கவில்லை.
இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், காசா மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் அரபு நாடுகள், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இந்த புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கான சரியான நேரம் குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 56,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT