Published : 26 Jun 2025 11:43 AM
Last Updated : 26 Jun 2025 11:43 AM
வாஷிங்டன்: மெக்சிகோ நாட்டின் குவாஞ்சுவாடோவில் உள்ள இரபுவாடோ நகரில் நடந்த இரவு நேர கொண்டாட்டத்தின் போது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இரபுவாடோ நகரில் புனித யோவான் பாப்டிஸ்டைக் கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தபோது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர், பெரும்பாலான நபர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க அங்கிருந்தவர்கள் கண்ணீருடன் ஓடிய வீடியோ காட்சிகள் ஆன்லைனில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ், இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். மெக்சிகோ முதல்வர் கிளாடியா ஷீன்பாம் பார்டோ இந்த தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், இது குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறினார்.
கடந்த மாதம், குவாஞ்சுவாடோவின் சான் பார்டோலோ டி பெரியோஸில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்த ஒரு விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோவின் வடமேற்கே உள்ள குவாஞ்சுவாடோ, நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் குவாஞ்சுவாடோ மாநிலத்தில் 1,435 கொலைகள் நடந்துள்ளன. இது வேறு எந்த மாநிலத்தையும் விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT