Last Updated : 25 Jun, 2025 08:00 PM

1  

Published : 25 Jun 2025 08:00 PM
Last Updated : 25 Jun 2025 08:00 PM

அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு - இழப்பீடு கோரும் ஈரான்!

மிக மோசமாக சேதமடைந்த இஸ்பஹான் அணுசக்தி மையத்தின் சாட்டிலைட் படம்.

தெஹ்ரான்: அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

கடந்த 21-ம் தேதி அன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதலில் இறங்கின. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகி, அமெரிக்க தாக்குதலில் தங்கள் தேசத்தின் முக்கிய அணுசக்தி மையங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். ‘எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன’ என அவர் உறுதி செய்தார்.

“தாக்குதலில் எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஐ.நா-வில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். போர்நிறுத்தம் தொடர்பாக எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் இஸ்ரேல் உடன் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி உள்ளது. அவ்வளவுதான்” என ஈரானின் வெளியுறவு துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே லெபனானை சேர்ந்த ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்தார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் ‘முற்றிலுமாக அழிக்கப்பட்டன’ என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களின் சாட்டிலைட் படங்களை அமெரிக்காவை சேர்ந்த Maxar டெக்னாலஜிஸ் பகிர்ந்துள்ளது. அதில் நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x