Published : 25 Jun 2025 02:39 PM
Last Updated : 25 Jun 2025 02:39 PM
வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் 'முற்றிலுமாக அழிக்கப்பட்டன' என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை எனவும் உளவுத்துறை கண்டறிந்ததாக வெளியான ஊடக செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டவை போலி செய்திகள். வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவுப்படுத்துவதற்கான முயற்சியில் இவர்கள் இணைந்துள்ளனர். ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்த ஊடகங்கள் இப்போது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.” என்று தெரிவித்திருக்கிறார்
கடந்த சனிக்கிழமையன்று போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று ஈரானிய அணுசக்தி மையங்களை அமெரிக்காவின் போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கி அழித்தது. இந்த அணுசக்தி மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் கூறினார். ஆனால், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா முற்றிலுமாக அழிக்கவில்லை என்றும், அணுசக்தி மையங்களின் நிலத்தடி கட்டிடங்களை அழிக்காமல் சில நுழைவாயில்களை மட்டுமே மூடிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து தற்போது இதுகுறித்து ட்ரம்ப் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த தகவல்கள் ட்ரம்ப்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க கச்சிதமாக செயல்பட்ட துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் நடக்கும் ஒரு தெளிவான முயற்சியாகும். பதினான்கு 30,000 பவுண்டு குண்டுகளை ஈரான் இலக்குகளின் மீது சரியாக வீசும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT