Published : 25 Jun 2025 12:53 PM
Last Updated : 25 Jun 2025 12:53 PM
புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று (ஜூன் 25) பகல் 12.01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
28 மணி நேரப் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின் இந்த ராக்கெட்டில் உள்ளனர். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பின்னர் வியாழக்கிழமை (ஜூன் 26) மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆக்சியம்-4-ன் இன்றைய ஏவுதலுக்கு அனைத்து அமைப்புகளும் நன்றாக உள்ளன. ஏவுதலுக்கான வானிலையும் 90 சதவீதம் சாதகமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பலமுறை தள்ளிவைப்புக்குப் பின்னர்.. கடந்த ஜூன் 11-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் 4-ன் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஜூன் 8 மற்றும் ஜூன் 10-ம் தேதிகளில் மோசமான வானிலை காரணமாக இந்த ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது. பலமுறை பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் 4ன் ஏவுதல் இன்று வெற்றிகரமாக நடந்துள்ளது.
Liftoff of Ax-4! pic.twitter.com/RHiVFVdnz3
— SpaceX (@SpaceX) June 25, 2025
சுபான்ஷு சுக்லா யார்? - அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்பட உள்ளார். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் அங்கு 14 நாட்கள் தங்கி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2024-ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து இவர் சிறப்புப் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT