Published : 25 Jun 2025 01:02 AM
Last Updated : 25 Jun 2025 01:02 AM
ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது.
மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம் என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தீடீரென அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்நத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியது. ‘‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என யாரும் கூற முடியாது’’ என ஈரான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தக்த் ரவாஞ்சி கூறினார்.
இதனால் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க பி-2 குண்டு வீச்சு விமானம் மூலம் சக்திவாய்ந்த ஜிபியு குண்டுகளை வீசியது. இதில் ஈரானின் ஃபர்தோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு சக்தி தளங்கள் முற்றிலும் நாசமாயின என அமெரிக்கா கூறியது.
அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்க முன்பு எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்களில் ஃபர்தோ அணுசக்தி தளத்துக்கு வெளியே 16 லாரிகள் நின்றிருந்தன. தாக்குதலுக்குப் பின் எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்களில் இந்த லாரிகளை காணவில்லை.
அதனால் ஈரான் வைத்திருந்த 400 கிலோ எடையுள்ள 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வேறு ஏதாவது மறைவிடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் கூறுகிறது. ஃபர்தோ அணுசக்தி தளத்துக்கு வெளியே இருந்த லாரிகளில் என்ன கொண்டு செல்லப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. இஸ்ஃபஹான் அருகே உள்ள வேறு ஒரு இடத்தில் 400 கிலோ யுரேனியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கருதுகிறது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால், 10 அணு ஆயுதங்கள் தயாரித்துவிடலாம். அதனால் கூடிய விரைவில் ஈரானில் சோதனை நடத்துவது மிக அவசியம் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிராஸி கூறுகிறார்.
மற்றொரு ஈரான் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பதற்கு முன்பாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் அணு விஞ்ஞானி முகமது ரெசா செடேகி சாபர் என்பவர் கொல்லப்பட்டார். இவர் வடக்கு ஈரானில் அஸ்தானே -யா - அஷ்ராபியா என்ற பகுதியில் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இஸ்ரேல் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதை ஈரானி டி.வி. உறுதி செய்துள்ளது. இவருக்கு அமெரிக்காவும் தடை விதித்திருந்தது. சில நாட்களுக்கு முன் டெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் முகமது ரெசாவின் 17 வயது மகன் கொல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT