Last Updated : 24 Jun, 2025 06:52 PM

5  

Published : 24 Jun 2025 06:52 PM
Last Updated : 24 Jun 2025 06:52 PM

“எனக்குப் பிடிக்கவில்லை!” - ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக ட்ரம்ப் சாடல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் | கோப்புப் படம்

வாஷிங்டன்: போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசுமானால், அது மிகப் பெரிய மீறல். எனவே, இஸ்ரேல் அதில் ஈடுபடக்கூடாது. உண்மை என்னவென்றால், இரண்டு நாடுகளுமே போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இருக்கிறார்கள். நேற்று நான் பார்த்த பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, நாங்கள் ஒப்பந்தம் செய்த உடனேயே இஸ்ரேல் குண்டுகளை வீசியது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் குண்டுகளை வீசி இருக்க வேண்டியதில்லை.

இஸ்ரேலின் பதிலடி மிகவும் வலுவாக இருந்தது. அவர்கள் இருவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக நான் நினைக்கிறேன். ஈரான், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் நீண்ட காலமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டு வருகின்றன. ஒரு நாடு என்ன செய்யும் என்பது மற்றொரு நாட்டுக்குத் தெரியாது. அப்படி ஒரு நிலைமை அங்கு இருக்கிறது. இது உங்களுக்குப் புரிகிறதா?" என்று தெரிவித்தார்.

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும், இஸ்ரேல் ஈரானை தாக்காது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய சில நிமிடங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டன. ஈரான் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு ரேடார் தளத்தை தாங்கள் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது.

டெல் அவிவ் மீது ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு வலுவாக பதிலளிக்க ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டதாக கூறினார். இருப்பினும், இதனை ஈரான் மறுத்ததோடு, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் மீது எந்த ஏவுகணைகளும் ஏவப்படவில்லை என்று அதன் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, தங்களது 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் முடிவு செய்தது. அதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து நேற்றிரவு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடின.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம் முடிவுக்கு வருவதாகவும், போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். அதன்படியே, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக உறுதி அளித்தன. எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் பரஸ்பரம் மோதலை தொடர்வதும், மாறி மாறி குற்றம்சாட்டுவதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பெரும் அதிருப்தி அடையச் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x