Last Updated : 24 Jun, 2025 06:22 PM

1  

Published : 24 Jun 2025 06:22 PM
Last Updated : 24 Jun 2025 06:22 PM

‘எங்களைத் தவிர எந்த நாடும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்க துணிந்தது இல்லை’ - ஈரான் தூதர்

புதுடெல்லி: அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க எந்த நாடும் துணிந்ததில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்தோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி, "வரலாற்றில் எந்த நாடும் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்ததில்லை. ஈரான் அதைச் செய்துள்ளது. இதை ஒரு குறியீட்டு பதிலடியாக நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள். ஆனால், அமெரிக்கா இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையை மீண்டும் செய்தால், அதற்கும் இதேபோன்ற பதில்தான் கிடைக்கும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நம்பகமானவர் அல்ல. அவர் ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலைத் தொடங்கினார். அவர் ஈரானில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கினார். அவர் சர்வதேச சட்டங்களையோ, மனிதாபிமான சட்டங்களையோ மதிக்கவில்லை. எனவே, இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஈரான் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் உறுப்பினராக உள்ளது. ஈரானிடம் எந்த அணு ஆயுதங்களும் இல்லை. இந்தச் சூழலில், ஈரான் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளது என்ற பொய்யான காரணங்களைக் கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது அபத்தமானது. இந்த மோதலின்போது இஸ்ரேல் பல்வேறு சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்திய போதிலும், இவை அனைத்தையும் மீறி, எங்கள் ஏவுகணைகள் இஸ்ரேலை கடுமையாக தாக்கின” என்று இராஜ் எலாஹி கூறினார்.

சனிக்கிழமையன்று ஈரானின் 3 முக்கிய அணு ஆயுத மையங்கள் மீது அமெரிக்கா நேரடியாக திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வலியுறுத்தலின் பேரில் ஈரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வதாக இன்று அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x