Last Updated : 24 Jun, 2025 01:19 PM

4  

Published : 24 Jun 2025 01:19 PM
Last Updated : 24 Jun 2025 01:19 PM

ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல்

டெல் அவிவ்: ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் ரைசிங் லயனின் அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது. இதன் மூலமாக ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளோம்.

ஈரான் வான்வெளியில் முழு வான் கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, ஈரான் அரசுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினோம். எங்கள் இலக்குகளை அடைந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் போர்நிறுத்தத்தின் எந்தவொரு மீறலுக்கும் இஸ்ரேல் வலுவாக பதிலளிக்கும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானும் ஒப்புதல்: இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது ஈரான் அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேல் தான் ஈரான் மீது முதலில் போர் தொடுத்தது. இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. இந்த தாக்குதலை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் நிறுத்தினால், அதன் பின்னர் எங்களது பதிலடியை தொடரும் நோக்கம் எங்களுக்கு இல்லை.” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் சொல்வது என்ன? - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போது வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x