Last Updated : 24 Jun, 2025 12:44 PM

3  

Published : 24 Jun 2025 12:44 PM
Last Updated : 24 Jun 2025 12:44 PM

“ஈரானியர்கள் போர் புரிவதில் அவ்வளவு சிறந்தவர்கள் அல்ல” - அமெரிக்க துணை அதிபர்

தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற ஜேடி வான்ஸ்

வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதன் மூலம், அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததன் மூலமும் ஈரானியர்கள் போரில் அவ்வளவு சிறந்தவர்கள் அல்ல என்பதை வெளிக் காட்டியுள்ளனர் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான 12 நாள் போர் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வர உள்ளது என்றும், போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்த நிலையில், அமெரிக்க செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜே.டி. வான்ஸ், போர் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர், “ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கர்கள் ஒருவர்கூட உயிரிழக்காத வகையில், ஈரானிய அணுசக்தி திட்டத்தை அதிபர் ட்ரம்ப் அழித்துவிட்டார். ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த நிலை வேறு. இப்போது நாம் இருக்கும் நிலை வேறு. ஒரு வாரத்திற்கு முன்பு, அணு ஆயுதத்தை வைத்திருப்பதற்கு மிக அருகில் ஈரான் இருந்தது. இப்போது ஈரான் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு அணு ஆயுதத்தை உருவாக்க இயலாது. ஏனெனில் நாங்கள் அதை அழித்துவிட்டோம்.

ஈரான் தனது அணுசக்தி திறனை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா பாடுபடும். இஸ்ரேலைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு முக்கியமான ராணுவ நோக்கத்தை நிறைவேற்றியுள்ளனர். ஈரானிய அணுசக்தி திட்டத்தை அழிக்க அவர்கள் எங்களுக்கு உதவியுள்ளனர். இஸ்ரேல் நாட்டை அச்சுறுத்திய ஈரானின் வழக்கமான ஏவுகணை திறனையும் அவர்கள் அழித்துள்ளனர்.

அமைதிப் பாதையைத் தொடர ஈரானியர்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். ஈரானியர்கள் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதன் மூலமும், அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததன் மூலமும் போரில் அவர்கள் அவ்வளவு சிறந்தவர்கள் அல்ல என்பதைக் காட்டியுள்ளனர்.

மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை உருவாக்குவோம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அது எப்போதும் அவரது இலக்காக உள்ளது. உண்மையில் நாம் திரும்பிப் பார்க்கும்போது, ​​12 நாள் போர் என்பது முழு பிராந்தியத்திற்கும் அமைதியை தருவதில் ஒரு முக்கிய நிகழ்வு.

இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்க விரும்பவில்லை என்பதை ஈரானியர்கள் மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் வான் பாதுகாப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கமான ஏவுகணைத் திட்டம் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, நான் முன்பு கூறியது போல், அவர்களின் அணுசக்தித் திட்டம் அழிக்கப்பட்டுள்ளது. “எனவே, ஈரானியர்கள் தொடர்ந்து போராட விரும்பாத ஒரு கட்டத்துக்குச் சென்றுவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் சொன்னது என்ன?: “இஸ்ரேல் தான் ஈரான் மீது முதலில் போர் தொடுத்தது. இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. இந்த தாக்குதலை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் நிறுத்தினால், அதன் பின்னர் எங்களது பதிலடியை தொடரும் நோக்கம் எங்களுக்கு இல்லை” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x