Published : 24 Jun 2025 06:50 AM
Last Updated : 24 Jun 2025 06:50 AM
தவறு செய்த இஸ்ரேல் இப்போது தண்டிக்கப்படுகிறது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு கொமேனி கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப்பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தனது பதிவுடன் வான்வழித்தாக்குதல் போல தோற்றமளிக்கும் ஒரு படத்தையும் கொமேனி பகிர்ந்துள்ளார். அந்த படத்தின் நடுவே ஒரு மண்டை ஓடு உள்ளது. அதன் நெற்றியில் யூத அடையாளத்தை குறிக்கும் அல்லது யூத மதத்தை குறிக்கும் இஸ்ரேல் கொடியில் உள்ள சின்னம் இடம்பெற்றுள்ளது.
ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் மிகவும் சக்திவாய்ந்த கொராம்ஷர் -4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், முதல் முறையாக கொமேனி வெளியிட்ட பதிவில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக, கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதாரி கூறுகையில், “ அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து அதற்கு தாமதமின்றி பதிலடி கொடுக்கப்படும். ஹார்முஸ் ஜலசந்தியை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT