Published : 23 Jun 2025 11:34 PM
Last Updated : 23 Jun 2025 11:34 PM
டெஹ்ரான்: ஈரான் எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் அப்பட்டமான ராணுவ தாக்குதல் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீறலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் திட்டமிடலின்படி ஆபரேஷன் பெஷாரத் ஃபத்தாவின் மூலம் கத்தாரில் உள்ள அல்-உதெய்த் ராணுவ தளத்தை பேரழிவுகரமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலுடன் குறிவைத்துள்ளோம்.
இந்த தளம் அமெரிக்க விமானப்படையின் தலைமையகமாகவும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க பயங்கரவாத ராணுவத்தின் மிகப்பெரிய சொத்தாகவும் உள்ளது. ஆயுதப் படைகளில் உள்ள எங்கள் தேசத்தின் மகன்களின் தீர்க்கமான இந்த நடவடிக்கை பற்றிய செய்தி வெள்ளை மாளிகைக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்லாமிய குடியரசு, எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது. இந்த நடவடிக்கை எங்கள் நட்பு மற்றும் சகோதர நாடான கத்தார் மற்றும் அதன் உன்னத மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரையுமாறு கத்தார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம் கத்தாரில் உள்ளது. வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, சுமார் 8,000 அமெரிக்க குடிமக்கள் அங்கு வசிக்கின்றனர். அதே போல மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் சென்ட்காம் தலைமையகமும் கத்தாரில்தான் உள்ளது. அங்கு பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள். ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன.
Skies over Qatar right now
— Dr. Eli David (@DrEliDavid) June 23, 2025
pic.twitter.com/V3IqLgGO9f
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT