Last Updated : 23 Jun, 2025 03:48 PM

 

Published : 23 Jun 2025 03:48 PM
Last Updated : 23 Jun 2025 03:48 PM

வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு செருப்பு மாலை - தேர்தல் முறைகேடு புகாரில் கைது

டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்து வெளியே இழுத்து வந்தனர்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா உள்பட 18 பேர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தொடர்ந்த வழக்கில் நூருல் ஹுடா கைது செய்யப்பட்டதாக டாக்கா பெருநகர காவல் துறையின் துணை ஆணையர் மொஹிதுல் இஸ்லாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) தெரிவித்தார்.

முன்னதாக, நூருல் ஹுடா வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு, செருப்பால் அடித்து, வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வன்முறை கும்பலிடம் இருந்து அவரை மீட்டு தங்கள் காவலில் எடுத்துள்ளனர். டாக்காவின் உத்தரா மேற்கு காவல் நிலைய எல்லைக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த உத்தரா மேற்கு காவல் நிலையத் தலைவர் ஹபிசுர் ரஹ்மான், "ஒரு கும்பல் ஹுடாவைச் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அவரை எங்கள் காவலில் எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

டாக்காவில் உள்ள உத்தரா பகுதியில் உள்ள ஹுடாவின் வீட்டை முற்றுகையிட்ட கும்பல், போலீசார் வருவதற்கு முன்பே அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றதாக மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

நூருல் ஹுடாவை செருப்பால் அடிப்பது, செருப்பு மாலை அணிவிப்பது மற்றும் அவர் மீது முட்டைகளை வீசுவது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. மேலும், அந்த கும்பல் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டுவதும், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த பிறகும் தொடர்ந்து அடிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாக வங்கதேச செய்தித்தாளான டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. 77 வயதாகும் நூருல் ஹுடா, 2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தேர்தல்களை மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x