Published : 23 Jun 2025 01:04 PM
Last Updated : 23 Jun 2025 01:04 PM
டெஹ்ரான்: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் இன்று (ஜூன் 23) வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் இரண்டாவது வாரமாக தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு, ஈரானில் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளது. அதன்படி, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், 380 பொதுமக்களும், 253 பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர் என அந்த புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
ஈரானில் மாஷா அமினியின் மரணம் தொடர்பான 2022 போராட்டங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு புள்ளிவிவரங்களை விரிவாக வழங்கிய இந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு, ஈரானில் உள்ள உள்ளூர் அறிக்கைகள் மற்றும் தங்களின் தொடர்புகள் மூலமாக இந்த விவரங்களை திரட்டியுள்ளனர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை நிலவரப்படி (ஜூன் 21) இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை சுமார் 400 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதே நேரத்தில் ஈரான் தாக்குதல்களால் இஸ்ரேலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களையும் அந்நாட்டு அரசு இன்னும் வழங்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT