Published : 23 Jun 2025 07:37 AM
Last Updated : 23 Jun 2025 07:37 AM
டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம் ஈரான் மற்றும் ஓமன் இடையே உள்ள குறுகலான ஹோமுஸ் ஜலந்தியைத்தான் பயன்படுத்துகின்றன.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்த வழியாக செல்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தபோது, ஹோமுஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடுப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது. ஆனால், அதை செய்யவில்லை.
ஆனால் அந்த வழியாகச் சென்ற இஸ்ரேல் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டது. சில கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது. இந்த முறை ஹோமுஸ் ஜலசந்தியை மூடினால் அது கச்சா எண்ணெய் போக்குவரத்தில் உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தும். இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீத இயற்கை எரிவாயு ஆகியவற்றை இந்த வழியாகத்தான் பெறுகிறது.
இதனால் இந்தியா மற்றும் ஒபெக் நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியதில் இந்து இந்த வழியாக சென்ற 1000 கப்பல்களின் ஜிபிஎஸ் தொடர்பில் இடையூறுகள் ஏற்பட்டது. இப்பகுதியில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்புக்காக பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் ஒரு பகுதி முகாமிட்டுள்ளது. | வாசிக்க > ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு - நடந்தது என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT