Published : 23 Jun 2025 07:16 AM
Last Updated : 23 Jun 2025 07:16 AM
டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.
ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது. இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டிடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன. இதில் 11 பேர் காயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது ராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளது என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில், “ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT