Published : 22 Jun 2025 06:29 AM
Last Updated : 22 Jun 2025 06:29 AM
வாஷிங்டன்: ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டன.
அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக வீடு திரும்புகின்றன. எங்கள் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களை நடத்த 2பி2 பாம்பர் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இந்த குண்டுகளை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்படி நேற்று ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. இதில் அந்த அணு சக்தி தளம் மிகக் கடுமையாக சேதமடைந்தது என்று குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT