Published : 22 Jun 2025 02:06 AM
Last Updated : 22 Jun 2025 02:06 AM
ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்படி நேற்று ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. இதில் அந்த அணு சக்தி தளம் மிகக் கடுமையாக சேதமடைந்தது.
3 தளபதிகள் உயிரிழப்பு: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் ஈரான் ராணுவத்தின் ஐஆர்ஜிசி படை பிரிவின் மூத்த தளபதி பேனம் ஷாரியாரி கொல்லப்பட்டார். லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுத்தி, காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இவரே ஆயுதங்களை விநியோகம் செய்து வந்தார்.
ஈரானின் கும் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஈரான் ராணுவத்தின் குத்ஸ் படைப் பிரிவின் தலைவர் சயீது இஷாதி உயிரிழந்தார். இவர் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கும் பணியை மேற்கொண்டு வந்ததாக இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டி உள்ளது. இஸ்ரேல் விமான படை தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் ட்ரோன் பிரிவு மூத்த தளபதி அமின் போர் ஜோத்கி உயிரிழந்தார்.
கடந்த 13-ம் தேதி முதல் இதுவரை ஈரான் முழுவதும் 657 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் நகரங்கள் வெறிச்சோடின: இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கொத்து குண்டுகளையும் ஈரான் ராணுவம் வீசி வருகிறது.
ஒரு கொத்து குண்டில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குண்டுகள் இருக்கும். இவை சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை வெடித்துச் சிதறி பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. சில குண்டுகள் பூமியில் புதைந்துவிடும். அவை சில மாதங்கள், சில ஆண்டுகள் கழித்துகூட வெடித்துச் சிதறும். கொத்து குண்டில் விஷ வாயுக்களை நிரப்பினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இதனால் இஸ்ரேல் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழையும்போது அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நகரங்களை சேரந்த இஸ்ரேல் மக்களின் செல்போன்களுக்கு அபாய எச்சரிக்கை தகவலும் அனுப்பப்படுகிறது.
அபாய ஒலி, எச்சரிக்கை தகவலை பார்த்தவுடன் இஸ்ரேல் மக்கள் வீடுகள், பொது இடங்களில் உள்ள பதுங்கு அறைகளில் தஞ்சமடைந்து விடுகின்றனர். இதனால் இஸ்ரேலில் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரவாக இஸ்ரேல் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செயல்படவில்லை.
இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' திறன் 90%-ல் இருந்து 65% ஆக குறைந்தது: இஸ்ரேல் ராணுவம் சார்பில் 'அயர்ன் டோம்' என்ற வான் பாதுகாப்பு கவசம் நிறுவப்பட்டு உள்ளது. சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்களை, 'அயர்ன் டோம்' ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழித்துவிடும்.
அயர்ன் டோமின் செயல்திறன் 90 சதவீதம் துல்லியமானது என்று இஸ்ரேல் ராணுவம் கூறிவந்தது. ஆனால் அதன் செயல்திறன் 60 முதல் 65 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 நாட்களில் ஈரான் ராணுவம், இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இதில் 60 சதவீத ஏவுகணைகளை மட்டுமே 'அயர்ன் டோம்' இடைமறித்து அழித்திருக்கிறது. 40 சதவீத ஏவுகணைகள் இஸ்ரேல் நகரங்கள் மீது விழுந்துள்ளன. இதன்காரணமாகவே இஸ்ரேல் நகரங்களில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.
3 வாரிசுகளை தேர்ந்தெடுத்த ஈரான் மத தலைவர் கொமேனி: இஸ்ரேல் விமானப் படையின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி (86), டெஹ்ரானில் உள்ள பதுங்கு அறையில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரை பாதுகாக்க ஈரான் ராணுவத்தினர் அடிக்கடி இடம் மாற்றி வருகின்றனர். எனினும், அவரை அழிக்கும்வரை ஓய மாட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் அயத்துல்லா அலி கொமேனி, 3 வாரிசுகளை தேர்ந்தெடுத்து உள்ளார். தனது மறைவுக்குப் பிறகு 3 பேரில் ஒருவரை ஈரான் மதத் தலைவராக நியமிக்கும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT