Published : 21 Jun 2025 06:59 PM
Last Updated : 21 Jun 2025 06:59 PM
தெஹ்ரான்: தான் கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், தனது பொறுப்பை வகிக்கப் போகும் தலைவரை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்து வருகிறது. “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்தக்கூடிய 3 மதகுருமார்களின் பெயர்களை பட்டியலிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தப் பட்டியலில் அவரது மகன் மொஜ்தபா பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் செய்தியை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தன்னைக் கொல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் கூறியதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
சாதாரண சூழ்நிலைகளில், ஒரு புதிய உச்ச தலைவரை நியமிக்கும் செயல்முறை பல மாதங்கள் ஆகலாம். இதில் தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். பல வேட்பாளர்கள் கலந்துகொள்ள முடியும். ஆனால், நாடு இப்போது போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்லாமிய குடியரசு மற்றும் அவரது மரபு இரண்டையும் பாதுகாக்க விரைவான மாற்றத்தை உறுதி செய்ய கமேனி விரும்புவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மூன்று ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் ராணுவ ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பான ஓர் உயர் ஈரானிய அதிகாரியையும், இரண்டு ஈரானிய தளபதிகளையும் ஒரே இரவில் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், "தற்போது தென்மேற்கு ஈரானில் உள்ள ராணுவ உள்கட்டமைப்பை போர் விமானங்கள் தாக்குகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT