Published : 21 Jun 2025 01:50 PM
Last Updated : 21 Jun 2025 01:50 PM
தெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தின.
இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையின்படி, ‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் அமின் பௌர் ஜோட்கி. புரட்சிகர காவல்படையின் இரண்டாவது UAV ட்ரோன் படைப்பிரிவின் கமாண்ட் தளபதியாக அவர் பதவி வகித்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கிய ஒன்பது நாட்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 7-வது உயர்மட்ட ஈரானிய தளபதி இவர் ஆவார்.
ஈரானின் ட்ரோன்கள், இந்த மோதலில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. அவை இஸ்ரேலின் பல பகுதிகளில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளன. ஈரானின் ட்ரோன்களை கண்டறிந்து, கண்காணிக்கவும் மற்றும் வீழ்த்துவதற்கும் நிறைய ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. தற்போது இரு தரப்பிலும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் தளபதி ஒருவர் கொல்லப்பட்டது, அந்த நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உளவாளிகள் 22பேர் கைது: மோதல் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. “இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் இஸ்ரேலின் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.” என்று ஈரானின் கோம் மாகாணத்தில் உள்ள காவல் உளவுத்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் வருமா? - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இரு நாடுகளும் சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதேபோல சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி, ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாக ஐ.நா கவுன்சிலிடம் தெரிவித்தார்.
ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர், தனது நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உலகளாவிய அணு ஆயுத பரவல் தடை சட்டத்தின் மீதான முழுமையான தாக்குதல் என்று ஐ.நா கவுன்சிலிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT