Published : 21 Jun 2025 12:59 PM
Last Updated : 21 Jun 2025 12:59 PM
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல தசாப்தங்களாக நடந்து வரும், வன்முறை ரத்தக்களரி மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய போரில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு சிறப்பான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஆவணங்களில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்பிரிக்காவிற்கும், வெளிப்படையாகச் சொன்னால், உலகிற்கும் ஒரு சிறந்த நாள்! இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணுவதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மேலும் மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
ரஷ்யா/உக்ரைன், இஸ்ரேல்/ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும், அதற்கான விளைவுகள் என்னவாக இருந்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ஆனால் மக்களுக்கு நான் செய்தது தெரியும், எனக்கு அவ்வளவுதான் முக்கியத்துவம்’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய ட்ரம்ப் உடனான உரையாடலின்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நேரடி ராணுவப் பேச்சுவார்த்தையால் ஏற்பட்டது என்றும், அமெரிக்கா ஒருபோதும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். இந்த சூழலில் மீண்டும் ட்ரம்ப், இந்தியா பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக கூறியுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT