Published : 21 Jun 2025 10:32 AM
Last Updated : 21 Jun 2025 10:32 AM
புதுடெல்லி: போர் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், ஈரான் நாட்டிலிருந்து தனது நாட்டினரை பாதுகாப்பாக அழைத்துவர இந்திய அரசு ஆபரேஷன் சிந்துவை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் தனது வான்வெளியை திறந்துள்ளது. இதனையடுத்து ஆபரேஷன் சிந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரானில் இருந்து மஹான் ஏர் நிறுவனத்தின் தனி விமானங்கள் மூலம் சுமார் 1000 இந்திய மாணவர்கள் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.
இதனையடுத்து ஈரானின் மஷாத்தில் இருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த முதல் விமானம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இரவு 11.40 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. அஷ்காபத்தில் இருந்து இந்திய மாணவர்களை ஏற்றி வரும் இரண்டாவது விமானம் இன்று (சனிக்கிழமை) காலை சுமார் 10 மணியளவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது விமானம் இன்று மாலை டெல்லியில் தரையிறங்கும்.
முன்னதாக இந்த நடவடிக்கை குறித்து நேற்று பேசிய ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவர் முகமது ஜவாத் ஹொசைனி, “நாங்கள் இந்தியர்களை எங்கள் சொந்த மக்களாகக் கருதுகிறோம். ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது, ஆனாலும் இந்தப் பிரச்சினை காரணமாக, இந்திய நாட்டினரின் பாதுகாப்பான பயணத்திற்காக ஈரான் வான்வெளியை திறக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முதல் விமானம் இன்றிரவு புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும், சனிக்கிழமை மேலும் இரண்டு விமானங்கள் தரையிறங்கும்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT