Published : 20 Jun 2025 02:25 PM
Last Updated : 20 Jun 2025 02:25 PM
இஸ்லாமாபாத்: ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம். ஆனால் இதுவரை எங்களிடம் ஈரான் எந்த வகையான ராணுவ உதவியையும் கேட்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரான் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் வெளிப்படையானது. ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்; ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஈரான் எல்லையில் உள்ள அகதிகளுக்கு பாகிஸ்தானில் தஞ்சம் வழங்க தெஹ்ரானிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. அதுபோல இதுவரை ஈரான் எங்களிடம் எந்த வகையான ராணுவ உதவியையும் கேட்கவில்லை.
ஐ.நா. சாசனத்தின் கீழ் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு உரிமை உண்டு. 21 முஸ்லிம் நாடுகள் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை கண்டித்துள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்துக்கு எதிரானவை. ஈரானில் நிலவும் சூழ்நிலை பாகிஸ்தானுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இஸ்ரேல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் குறிவைப்பது சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்புகள் மற்றும் பிற சர்வதேச சட்டங்களை மீறுவதாகும்.
ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் ஆதரவளித்தது. துணைப் பிரதமர் இஷாக் டார் ஈரான், துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகள் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எடுத்துரைத்தார்.
தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் மஷாத், ஜஹேதானில் உள்ள தூதரகங்கள் பாகிஸ்தான் நாட்டினரை ஈரானில் இருந்து வெளியேற்றுவதில் உதவி வருகிறது. இதுவரை 3,000 பாகிஸ்தானியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT