Published : 20 Jun 2025 01:47 PM
Last Updated : 20 Jun 2025 01:47 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கிய இந்தியா, மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளின் இரவில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களை இந்திய விமானப் படை குறிவைத்து தாக்கி கடும் சேதத்தை விளைவித்தது. இதன் காரணமாக, வேறு வழியின்றி போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது.
பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ, இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓவிடம் தொலைபேசியில் பேசி, இதற்கான அழைப்பை விடுத்தார். இந்த அழைப்பின் பேரில், இந்தியா தனது ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
இந்த போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலில் உரிமை கோரினார். வர்த்தகத்தை முன்னிறுத்தி இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாக ட்ரம்ப் கூறினார். இரு தினங்களுக்கு முன்பு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் தலையீடு காரணமாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவில்லை என்றும், பாகிஸ்தான் டிஜிஎம்ஓ கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். பின்னர், அதிபர் ட்ரம்ப்பும் இதனை ஒப்புக்கொண்டார்.
இதேபோல், இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே ராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டதாக தொடக்கத்தில் பாகிஸ்தான் கூறி வந்தது. அதேநேரத்தில், ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்த அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் கூறியது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர், "துரதிர்ஷ்டவசமாக, இந்தியா மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் நூர் கான் விமானப் படை தளத்தையும், ஷோர்கோட் விமான தளத்தையும் தாக்கினர். 45 நிமிடங்களுக்குள், சவுதி இளவரசர் பைசல் என்னை அழைத்தார்.
அப்போதுதான் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனான எனது உரையாடலைப் பற்றி அறிந்ததாக அவர் கூறினார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசவும், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பாகிஸ்தானும் நிறுத்த தயாராக இருக்கிறது என்று தெரிவிக்க தனக்கு அதிகாரம் உள்ளதா என்று அவர் கேட்டார். நான், "ஆம் சகோதரரே, உங்களால் முடியும்" என்றேன். பின்னர் அவர் என்னைத் திரும்ப அழைத்தார், ஜெய்சங்கரிடம் அதையே தெரிவித்ததாகக் கூறினார்," என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான ராணுவ வளாகங்களில் ஒன்று நூர் கான் விமானப் படை தளம். ராவல்பிண்டிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையே உள்ள இந்த விமானப் படைத் தளம், விமானப்படை நடவடிக்கைகள் மற்றும் விஐபி போக்குவரத்து பிரிவுகள் இரண்டையும் கொண்டுள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷோர்கோட் விமானப்படை தளமும் அந்நாட்டுக்கு மிகவும் முக்கிய தளமாக உள்ளது. இவ்விரு விமானப்படைத் தளங்கள் மீதும் இந்தியா நடத்திய தாக்குதலே பாகிஸ்தான் பணிய காரணமாக இருந்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்தே, பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் தொலைபேசியில் பேசி உள்ளார். இது குறித்த தகவல் சவூதி இளவரசருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், ஜெய்சங்கரிடம் பேசி உள்ளார்.
இதற்கு முன், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “இந்தியா ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டுமானால், பாகிஸ்தான் அதனை கோர வேண்டும். அதனை நாங்கள் கேட்க வேண்டும். அப்போதுதான், நாங்கள் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவோம் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. பின்னர் அதுதான் நடந்தது.” என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT