Published : 20 Jun 2025 12:11 PM
Last Updated : 20 Jun 2025 12:11 PM
டெல் அவிவ்: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது.
இஸ்ரேலின் 'அறிவியலின் மணிமகுடம் (crown jewel of science)' என அழைக்கப்படும் மிகமுக்கியமான வெய்ஸ்மென் ஆராய்ச்சி மையத்தை ஈரான் ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், அது ஆராய்ச்சி மையத்தில் உள்ள பல ஆய்வகங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், இது பல ஆண்டுகால அறிவியல் ஆராய்ச்சியை நசுக்கியதுடன், இஸ்ரேலிய விஞ்ஞானிகளுக்கு ஒரு அச்சுறுத்தும் செய்தியை அனுப்பியது. இஸ்ரேல் விஞ்ஞானிகளையும், அவர்களின் நிபுணத்துவத்தையும் இப்போது ஈரான் முக்கியமாக குறிவைத்து வருகிறது.
"இது ஈரானுக்கு ஒரு தார்மீக வெற்றி" என்று அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலக்கூறு செல் உயிரியல் துறை மற்றும் மூலக்கூறு நரம்பியல் துறையின் பேராசிரியர் ஓரன் ஷுல்டினர் கூறினார். மேலும், " இஸ்ரேலின் ஆய்வகம் தாக்குதலின் போது அழிக்கப்பட்டது. ஈரானால் இஸ்ரேலின் அறிவியலின் மணிமகுடத்திற்கு தீங்கு விளைவிக்க முடிந்தது. எங்கள் ஆய்வுகள் அனைத்தும் நின்றுவிட்டன. இந்த நிறுவனத்தில் அறிவியல் பணிகளை மீண்டும் கட்டியெழுப்பவும், மீண்டும் இயல்பான பாதையில் கொண்டு வரவும் பல ஆண்டுகள் ஆகும். நாம் உருவாக்கக்கூடிய அறிவியலுக்கும் உலகிற்கு நாம் செய்யக்கூடிய பங்களிப்புக்கும் இது மிகவும் குறிப்பிடத்தக்க சேதம்" என்றார்
பல ஆண்டுகளாக, இஸ்ரேல் ஈரானிய அணு விஞ்ஞானிகளை குறிவைத்து வருகிறது. ஈரானின் அணு விஞ்ஞானிகளை குறிவைப்பதன் மூலம் அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியும் என்று இஸ்ரேல் நம்புகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் சில நாட்களுக்கு முன்பு ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அந்நாட்டின் அணு விஞ்ஞானிகள், உயர் தளபதிகளை கொன்றனர். இப்போது அதே பாணியில் ஈரானும், இஸ்ரேல் விஞ்ஞானிகளை குறிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT