Published : 20 Jun 2025 06:31 AM
Last Updated : 20 Jun 2025 06:31 AM
டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்களும் அழிந்துள்ளன.
கடந்த 13-ம் தேதி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளிடையே 7-வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. கடந்த 7 நாட்களில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட அந்த நாட்டின் 1,100 இடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. குறிப்பாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு கீழே சுமார் 90 மீட்டர் ஆழத்தில் அந்த நாட்டின் மிக முக்கிய அணுசக்தி தளம் செயல்படுகிறது. இந்த தளம் மீது இஸ்ரேல்விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆனால் அதனை அழிக்க முடியவில்லை.
அமெரிக்க ராணுவத்தால் மட்டுமே பூமியைதுளைத்து போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் 11 மூத்த தளபதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரான் முழுவதும் 154 ராணுவ வீரர்கள் உட்பட 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைநகர் டெஹ்ரான் சுடுகாடாக மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் தலைநகரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.
டெஹ்ரானில் உள்ள ராணுவ தலைமையகங்கள், அணு சக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள எண்ணெய் வயல்கள் தீப்பிடித்து எரிகின்றன. இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் பெரும்பாலும் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்தே தாக்குதலை நடத்தி வருகின்றன. ராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஈரானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இஸ்ரேலில் 24 பேர் உயிரிழப்பு: ஈரான் ராணுவ தரப்பில் இஸ்ரேலை குறிவைத்து இதுவரை 400 ஏவுகணைகள் வீசப்பட்டு உள்ளன. மேலும் 1,000 ட்ரோன்கள் மூலமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இஸ்ரேலின் டெல் அவிவ் உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 7 நாட்களில் இஸ்ரேல் முழுவதும் 24பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேலின் அனைத்து வீடுகளிலும் பங்கர் ரூம் என்ற பதுங்கு அறைகள் உள்ளன. ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழையும்போது அபாய ஒலி எழுப்பப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பதுங்கு அறைகளில் தஞ்சமடைகின்றனர். இதனால் இஸ்ரேலில் உயிரிழப்பு குறைவாக இருக்கிறது. அந்த நாட்டின் வான் பாதுகாப்பும் வலுவாக இருப்பதால் பாதிப்புகள் குறைவாக உள்ளன.
எனினும் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ராணுவ முகாம்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஈரான் ராணுவ ஏவுகணை தாக்குதல்களில் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகம் தகர்க்கப்பட்டு உள்ளது. மேலும் ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுத்தி தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் பலமுனை தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது. எனினும் ஈரானை ஒப்பிடும்போது இஸ்ரேலில் உயிரிழப்பு, பொருட்சேதம் மிகவும் குறைவாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT