Last Updated : 19 Jun, 2025 05:10 PM

3  

Published : 19 Jun 2025 05:10 PM
Last Updated : 19 Jun 2025 05:10 PM

பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம் குறித்து ட்ரம்ப் உடன் பேச்சு நடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி

இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் வாஷிங்டனில் நடந்த "இனிமையான" சந்திப்பின் போது, ​​பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து ராணுவத் தலைமைத் தளபதி சையத் அசிம் முனிர் விவாதித்ததாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அடுத்து அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்தார். அதிபர் ட்ரம்ப், அசிம் முனிருக்கு மதிய விருந்தளித்தார். இந்த விருந்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உளவுத்துறை தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்த முதல் ராணுவத் தளபதி எனும் சிறப்பை அசிம் முனிர் பெற்றுள்ளார். அரசியல் பதவியை வகிக்காமல், ராணுவச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யாமல் பணியாற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஒருவருக்கு விருந்தளித்த முதல் அமெரிக்க அதிபர் எனும் பெயரை டொனால்டு ட்ரம்ப் பெற்றுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சந்திப்பு ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இது உரையாடலின் ஆழத்தையும் நல்லிணக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் சந்திப்பின்போது, அதிபர் ட்ரம்ப், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பைப் பாராட்டினார். பயங்கரவாத எதிர்ப்பில் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, கிரிப்டோ கரன்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக கூட்டாண்மையை உருவாக்குவதில் அதிபர் ட்ரம்ப் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

சிக்கலான பிராந்திய காலக்கட்டத்தில் சையத் அசிம் முனிர், தலைமைத்துவத்தையும் தீர்க்கமான தன்மையையும் வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் பாராட்டினார். பரஸ்பரம் வசதியான தேதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ள அரசாங்கத்தின் சார்பாக ட்ரம்ப்புக்கு ராணுவத் தலைவர் அழைப்பு விடுத்தார். இது இருதரப்பு உறவுகளின் அரவணைப்பை பிரதிபலிக்கும் ஒரு குறியீடு ஆகும்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நிறுத்தத்தை எளிதாக்குவதில் ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்த ட்ரம்ப்புக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் சையத் அசிம் முனிர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. மோதலைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை வலுப்படுத்தும் தொடர் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் பகிரப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x