Last Updated : 19 Jun, 2025 04:56 PM

 

Published : 19 Jun 2025 04:56 PM
Last Updated : 19 Jun 2025 04:56 PM

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரில் சர்வதேச அணுசக்தி முகமையும் கூட்டாளி: ஈரான் குற்றச்சாட்டு

தெஹ்ரான்: இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரில் ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமையும் ஒரு கூட்டாளியாக செயல்படுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'சாக்குப் போக்கு' உருவாக்கியதற்காக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA - International Atomic Energy Agency) மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசியை டேக் செய்த எக்ஸ் பதிவில், ‘ஈரான் அணு ஆயுதங்களை தீவிரமாக உருவாக்கி வருவதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்கள் அமைப்பிடம் இல்லை என்ற க்ரோசியின் சமீபத்திய கருத்து மிகவும் தாமதமானது.

E3/US [பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா] 'இணக்கமின்மை' என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் ஒரு தீர்மானத்தை உருவாக்கிய உங்கள் முற்றிலும் சார்புடைய அறிக்கையில் இந்த உண்மையை நீங்கள் மறைத்துவிட்டீர்கள். அதே தீர்மானத்தை பின்னர், ஓர் இனப்படுகொலை போர் வெறி கொண்ட ஆட்சி, ஈரான் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கும், நமது அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீது சட்டவிரோத தாக்குதலைத் தொடங்குவதற்கும் இறுதி சாக்குப்போக்காகப் பயன்படுத்தியது.

இந்தக் குற்றவியல் போரின் விளைவாக எத்தனை அப்பாவி ஈரானியர்கள் கொல்லப்பட்டனர், ஊனமுற்றுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஐ.நா. தலைமை நியமித்த ஒரு சர்வதேச அரசு ஊழியர் நடக்கும் முறை என்பது இதுதானா? க்ரோஸி, தவறாக வழிநடத்தும் கதைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் பொறுப்புக்கூறலைக் கோருகின்றன.

நீங்கள் அணு ஆயுதப் பரவல் தடை ஆட்சியைக் காட்டிக் கொடுத்தீர்கள்; இந்த அநீதியான ஆக்கிரமிப்புப் போருக்கு சர்வதேச அணுசக்தி முகமையை ஒரு பங்காளியாக்கி விட்டீர்கள். உங்களுக்கு தெளிவான மனசாட்சி இருக்கிறதா?!' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முந்தைய சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அறிக்கையில், ஈரான் அதன் அணுசக்தித் திட்டத்தில் அதன் கடமைகளை மீறுவதாகக் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x