Published : 19 Jun 2025 03:53 PM
Last Updated : 19 Jun 2025 03:53 PM
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு அயதுல்லா அலி சிஸ்தானி எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஈரான் - இஸ்ரேல் போர் முழு பிராந்தியத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து அயதுல்லா அலி சிஸ்தானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானின் உச்ச மதத் தலைவரையும், அரசியல் தலைவரையும் குறிவைப்பது பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது பரவலான குழப்பத்தையும் தூண்டக்கூடும். இது பிராந்திய மக்களின் துன்பத்தை அதிகரித்து, அனைவரின் நலன்களுக்கும் கடுமையாக தீங்கு விளைவிக்கும்" என்று அவர் எச்சரித்தார்.
மேலும், “இந்த அநீதியான போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு அமைதியான தீர்வைக் காண அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்று சர்வதேச சமூகத்தை சிஸ்தானி வலியுறுத்தினார். ஈராக்கில் உள்ள கோடிக்கணக்கான ஷியா முஸ்லிம்களுக்கான மிக உயர்ந்த மதத் தலைவராக அயதுல்லா அலி சிஸ்தானி உள்ளார். ஈராக்கில் உள்ள பெரும் பகுதி மக்களை அணி திரட்டும் அதிகாரம் அவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ‘ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT