Published : 19 Jun 2025 12:47 PM
Last Updated : 19 Jun 2025 12:47 PM
டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது.
சொரோகா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மருத்துவமனைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பலரும் காயமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு இனி சிகிச்சைக்காக யாரும் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார். 1000 படுக்கைகள் வசதி கொண்ட இந்த மருத்துவமனை தெற்கு இஸ்ரேலைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு மருத்துவ சேவை வழங்கிவந்தது. இந்த மருத்துவமனை மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசுக்கு கடும் அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் பற்றி இஸ்ரேல் சுகாதார அமைச்சர் உரியல் புசோ கூறும்போது, “ஈரான் போர்க்குற்றம் புரிந்துள்ளது” என்று ஆவேசமாக தெரிவித்தார். ஈரானின் இன்றைய தாக்குதலில் மட்டும் 32 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளதாகவும், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப்பின் உறுதியற்ற பதில்: இதற்கிடையில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் நேரடியாக ஈடுபடுவது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குழப்பமான பதிலை கூறியுள்ளார். செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக களமிறங்குமா, இறங்காதா என்பது தெரியாது. யாருமே அதைக் கணிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஈரான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அது பேச்சுவார்த்தையை எதிர்நோக்குகிறது” என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் பதிலால் சரிந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுமா என்பது குறித்து ட்ரம்ப் உறுதியான முடிவு ஏதும் சொல்லாததால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை சற்றே சரிந்துள்ளது. பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 20 சென்ட் குறைந்து ஒரு பேரலுக்கு 76.5 டாலராக குறைந்துள்ளது.
முன்னதாக, அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் இன்று 7-வது நாளை எட்டிய நிலையில், மிகத் தீவிர வான்வழி போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே, ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும், அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT