Published : 19 Jun 2025 11:38 AM
Last Updated : 19 Jun 2025 11:38 AM
புதுடெல்லி: “எங்களைச் சுற்றி ஏவுகணைகளும், குண்டுகளும் விழுவதைக் கண்டு பயந்துபோனோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்” என்று ஈரானிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து ஆர்மீனியா நாட்டுக்கு தரைவழியாக அழைத்துவரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் இன்று (ஜூன் 19) அதிகாலையில் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர்.
ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். ஈரானின் வான்வெளி மூடப்பட்டதால் இவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் அர்மீனியா வழியாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
‘ஆபரேஷன் சிந்து’ என்றால் என்ன? - ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ‘ஆபரேஷன் சிந்து’ திட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கம் ஈரானின் உர்மியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 110 மாணவர்களை வெளியேற்றி, கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்மீனியாவுக்கு அனுப்பி வைத்தது.
அதைத் தொடர்ந்து அவர்கள் இன்று டெல்லி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இந்த விமானத்தில் வந்த 94 மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம் தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நகரத்திலிருந்து அர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்டனர். தனியாக வாகனங்கள் வைத்துள்ள மற்ற இந்தியர்களும் தெஹ்ரான் நகரத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனித்தனியாக, சில இந்தியர்கள் ஆர்மீனியாவின் எல்லை வழியாக ஈரானை விட்டு வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது. நிலையற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் சில ஆலோசனைகளை வழங்குவோம்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், ‘உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 110 இந்திய மாணவர்கள், அவர்களில் 90 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள், ஆர்மீனியாவிற்குள் பாதுகாப்பாக எல்லையைக் கடந்து டெல்லி வந்தனர். மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியை செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் நன்றி தெரிவிக்கிறது. மீதமுள்ள அனைத்து மாணவர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
ஈரானில் எம்பிபிஎஸ் மாணவரான 21 வயது மாஸ் ஹைதரின் தந்தை ஹைதர் அலி, மீட்பு முயற்சிகளுக்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்."நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் தெஹ்ரானில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மீட்கப்படாதது எங்களுக்கு வருத்தமாக உள்ளது" என்றார்
டெல்லியில் தரையிறங்கிய எம்பிபிஎஸ் மாணவர் மிர் கலீஃப், "எங்களால் பல ஏவுகணைகளைப் பார்க்க முடிந்தது. ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. எங்கள் சுற்றுப்புறத்தில் குண்டுவீசப்பட்டது. நிலைமையைக் கண்டு நாங்கள் மிகவும் பயந்தோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்.” என்று நம்புகிறேன்.
ஈரானில் இன்னும் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். அவர்கள் விரைவில் இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT