Published : 18 Jun 2025 11:05 PM
Last Updated : 18 Jun 2025 11:05 PM
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அற்புதமான மனிதர் என்றும், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறினார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
“இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்.
பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி என போரை நிறுத்த உதவினர். அவர்கள் இருவரும் செல்வாக்கு மிக்க நபர்கள். இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்டவை. இது நான் எழுதிய கதை அல்ல என நம்புகிறேன். போரை நிறுத்தியது நான்தான்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி உடன் சுமார் 35 நிமிடங்கள் வரை தொலைபேசியில் அதிபர் ட்ரம்ப் உரையாடி இருந்தார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தெளிவுபடுத்தி இருந்தார்.
இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இனிமேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அதிபர் ட்ரம்ப் இதை கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீரை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் இன்று (ஜூன் 18 - அமெரிக்க நேரப்படி) சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT