Last Updated : 18 Jun, 2025 06:07 PM

13  

Published : 18 Jun 2025 06:07 PM
Last Updated : 18 Jun 2025 06:07 PM

‘இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டாம்’ - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

புதின் உடன் ட்ரம்ப் - கோப்புப் படம்

மாஸ்கோ: இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக ராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க ராணுவ உதவி வழங்குவது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும். இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவி அல்லது அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ளக் கூடாது. இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும்” என்றார்.

மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் ரஷ்யா தொடர்பில் இருப்பதாக ரியாப்கோ கூறினார். அதே நேரத்தில் ரஷ்ய உளவுத் துறை சேவையின் தலைவர் செர்ஜி நரிஷ்கின், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமை இப்போது மோசமாக இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், ஈரான் - இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று தொலைபேசியில் பேசினர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டதாக ரஷ்ய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய கவலைகளுக்கு ராஜதந்திர தீர்வைக் காண உதவும் வகையில் மத்தியஸ்தராக செயலாற்ற ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் வலியுறுத்தினார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானுக்கு ஆபத்து: ஈரானின் ஆழமான பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை அழிக்கக் கூடிய சக்திவாய்ந்த ஆயுதம், அமெரிக்க பதுங்குகுழி வெடிக்கும் குண்டு ஆகும். ஒருவேளை இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியாக ஆதரவளிக்க முடிவு செய்தால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கும் ஆயுதமாக இது இருக்கும். இந்த வெடிகுண்டுகள், வெடிப்பதற்கு முன்பு 200 அடி (61 மீட்டர்) நிலத்தடியில் ஊடுருவக்கூடிய திறன் கொண்ட 30,000 பவுண்டுகள் (13,607 கிலோ) எடை கொண்டது ஆகும்.

முன்னதாக, அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இரு தரப்பும் 6-வது நாளாக இன்றும் பரஸ்பரம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x