Last Updated : 18 Jun, 2025 05:43 PM

 

Published : 18 Jun 2025 05:43 PM
Last Updated : 18 Jun 2025 05:43 PM

“ஈரான் ஒருபோதும் சரணடையாது” - ட்ரம்ப்புக்கு அயதுல்லா அலி கமேனி பதிலடி

தெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும், எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார்.

தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறும்போது, "ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதேபோல் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். திணிக்கப்பட்டால் இந்த நாடு யாருக்கும் சரணடையாது. ஈரானையும் அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள், ஈரானியர்கள் அச்சுறுத்தலின் மொழிக்கு சரியாக பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிவார்கள். எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் சந்தேகத்துக்கு இடமின்றி சரிசெய்ய முடியாத விளைவுகளுடன் இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

இதனிடையே, இன்று காலை தனது அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், “தேசிய ஒற்றுமையுடன் எந்த நெருக்கடியையும் நாங்கள் சமாளிப்போம். மக்கள் எங்களுடன் நின்றால், எந்தப் பிரச்சினையும் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்காது. அதனால்தான் அனைத்து நடவடிக்கைகளும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது அவசியம்” என்றார். மேலும், அண்டை நாடுகள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஈரான் அமைச்சர்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது சமூக வலைதள பதிவுகளில், “ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு. ஆனால், அங்கு அவர் பத்திரமாக இருக்கிறார். அவரை நாங்கள் வெளியே கொண்டுவரப் போவதில்லை. அதாவது இப்போதைக்கு அவரை எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால், அமெரிக்க மக்களோ, படைவீரர்களோ ஏவுகணைகளால் தாக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்துகொண்டே வருகிறது. எனவே ஈரான் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சரணடைய வேண்டும்” என்று எச்சரித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “கடவுளின் பெயரில் போர் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். இஸ்ரேலியர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம்” என்று குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது.

போர் நிலவரம் என்ன? - அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

585 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் வாஷிங்டனை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஈரானில் இதுவரை இறந்தவர்களில் 239 பேர் பொதுமக்கள் என்றும், 126 பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்றும் அடையாளம் கண்டுள்ளதாக அந்தக் குழு கூறியது. இஸ்ரேலிலும் உயிரிழப்பு எண்ணிக்கு 25-ஐ தாண்டிவிட்டது, 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.

ஆறாவது நாளான இன்று ‘ஃபதா 1’ என்ற சூப்பர்சோனிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியது. இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை மேக் 3 வேகத்தில் அதாவது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும். மணிக்கு 17,900 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழிப்பது சிரமம். 12 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 1,400 கி.மீ தூரம் சென்று தாக்கும். திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை 200 கிலோ வெடிகுண்டை எடுத்துச் சென்று தாக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஆறாவது நாளான இன்று மட்டும் ஈரானின் 40 இடங்களை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x