Last Updated : 18 Jun, 2025 12:19 PM

 

Published : 18 Jun 2025 12:19 PM
Last Updated : 18 Jun 2025 12:19 PM

நாளுக்குநாள் தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 585 பேர் உயிரிழப்பு; 1326 பேர் காயம்

தெஹ்ரான்: இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஈரான் முழுவதும் 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரையிலான சேதங்களே அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில், 6-வது நாளான இன்று இஸ்ரேல் தனது தாக்குதலை இன்னும் அதி தீவிரமாக்கியுள்ளது.

585 பேர் உயிரிழப்பு: ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் முழுவதும் இதுவரை 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் வாஷிங்டனை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஈரானில் இதுவரை இறந்தவர்களில் 239 பேர் பொதுமக்கள் என்றும், 126 பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்றும் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது.

2022-ல் ஈரானில் கட்டாய ஹிஜாப்-க்கு எதிரான மாசா அமினியின் மரணம் தொடர்பான போராட்டங்களின் போது விரிவான உயிரிழப்பு புள்ளிவிவரங்களையும் வழங்கிய இந்த குழு, தற்போது ஈரானின் உள்ளூர் அறிக்கைகளையும், அந்த நாட்டில் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இஸ்ரேலுடனான மோதலில் வழக்கமான இறப்பு எண்ணிக்கையை ஈரான் வெளியிடவில்லை. திங்களன்று வெளியிடப்பட்ட அதன் கடைசி புதுப்பிப்பில், ஈரானில் இதுவரை 224 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,277 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஒரே நேரத்தில் 50 போர் விமானங்கள்: இஸ்ரேல் - ஈரான் மோதல் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தொடர் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியது. இச்சூழலில் ட்ரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு அமெரிக்கா போர் விமானங்களை அனுப்பியுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இன்று காலை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதோடு, ஈரானிய ராணுவ உபகரணங்கள் உற்பத்தி ஆலைகளைக் குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சில மணி நேரங்களில் மட்டுமே ஈரானில் 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இன்றைய அதிரடி தாக்குதல், ஈரானின் ஏவுகணை தயாரிப்பை முறியடிக்கவும், அணு ஆயுத தயாரிப்பு கட்டமைப்புகளை சிதைக்கவும் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது.

ட்ரம்ப் எச்சரிக்கையும், கமேனி எதிர்வினையும்.. முன்னதாக, “ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்” என்று எச்சரித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x