Published : 18 Jun 2025 10:30 AM
Last Updated : 18 Jun 2025 10:30 AM
தெஹ்ரான்: ஈரான் - இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டல்களைத் தொடர்ந்து கமேனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இதே மிரட்டலை ஆங்கிலம், ஃபார்ஸியில் வெளியிட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தற்போது அதனை ஹீப்ரூ மொழியில் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே மூன்று மொழிகளில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும், ஃபார்ஸி மொழியில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கையில் வாளேந்திய நபர் கோட்டை வாயிலில் இருப்பதுபோன்ற சித்தரிப்புப் படத்தை இணைத்து, ‘போர் தொடங்கியது’ என்று குறிப்பிட்டுள்ளார். கோட்டையின் மேலே குண்டு மழை பொழிவதுபோலவும் காட்சி உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமியர்களுக்கும் - யூதர்களுக்கும் இடையேயான கைபர் போரை நினைவுகூர்வதுபோல் இந்த வரைபடம் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், "போர்க் குற்றங்களைச் செய்வதற்காகவும், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்காகவும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதே பாதையை எடுத்த ஈரானுக்கு அண்டை நாட்டில் இருந்த சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில்தான், “இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிரான நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். இதனால் ஈரானின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற பதற்றம் உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT