Published : 17 Jun 2025 10:52 PM
Last Updated : 17 Jun 2025 10:52 PM
"ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று பேசியிருந்த நிலையில், தற்போது இந்த கருத்தை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதே போல, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறும்போது, "போர்க் குற்றங்களைச் செய்வதற்காகவும், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்காகவும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதே பாதையை எடுத்த ஈரானுக்கு அண்டை நாட்டில் இருந்த சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த 13-ம் தேதி ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. நான்காவது நாளாக நேற்றும் போர் நீடித்தது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உளவுத் துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டார். ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT