Last Updated : 17 Jun, 2025 07:24 PM

3  

Published : 17 Jun 2025 07:24 PM
Last Updated : 17 Jun 2025 07:24 PM

‘இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு’ - ஜி7 கூட்டறிக்கையில் ஈரான் குறித்து இருப்பது என்ன?

ஜி7 நாடுகளின் தலைவர்கள்

கனானாஸ்கிஸ் (கனடா): பயங்கரவாதத்தின் மையமாக ஈரான் உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள ஜி7 தலைவர்கள், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜி7 உச்சிமாநாடு கனடாவின் கனானாஸ்கிஸ் என்ற இடத்தில் தொடங்கியுள்ளது. இதன் முதல் அமர்வில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘ஜி7 தலைவர்களான நாங்கள், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் சூழலில், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேலின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

பிராந்திய உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் நாங்கள் தொடர்ந்து தெளிவாக இருக்கிறோம். ஈரானிய நெருக்கடியின் தீர்வு, காசாவில் போர் நிறுத்தம் உட்பட மத்திய கிழக்கில் பரந்த அளவிலான விரோதப் போக்குக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச எரிசக்தி சந்தைகளுக்கான தாக்கங்கள் குறித்து நாங்கள் விழிப்புடன் இருப்போம். மேலும், சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க ஒருமித்த எண்ணம் கொண்ட நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்போம்’ என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல், ஈரான் இடையே இன்று 5-வது நாளாக போர் நீடித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்கள், எண்ணெய் வயல்கள், மின்விநியோக கட்டமைப்புகள், குடிநீர் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் அதிதீவிர தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஈரானில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நாட்டின் ஆயுத கிடங்குகள், அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்களும் ட்ரோன்களும் டெஹ்ரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மொசாட் உளவுப் பிரிவின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் இன்று ஏவுகணைகளை வீசியது. இதில் மொசாட் அலுவலகத்தின் மீது சில ஏவுகணைகள் விழுந்து வெடித்துச் சிதறின. அந்த வளாகம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், தங்களது விமான படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவ தளபதி அலி ஷத்மானி உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x