Last Updated : 17 Jun, 2025 06:08 PM

 

Published : 17 Jun 2025 06:08 PM
Last Updated : 17 Jun 2025 06:08 PM

இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்

தெஹ்ரான்: டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதுகுறித்த அறிக்கையில், "இஸ்ரேலின் சியோனிச ஆட்சி ராணுவத்தின் ராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் அவிவில் உள்ள சியோனிச ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கை திட்டமிடல் மையமான மொசாட்டையும் தாக்கினோம். அது தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறியது.

இன்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது பலத்த குண்டுமழை சத்தம் கேட்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. மேலும், ஈரானிய ஏவுகணைகள் வருவது குறித்து இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

"சிறிது நேரத்துக்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணை அச்சுறுத்தலை அகற்ற, தேவையான இடங்களில் அவற்றை இடைமறித்து தாக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம்" என்று ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பல பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட இடங்களை விட்டு வெளியேற மக்கள் அனுமதிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. ஏவுகணைகள் விழுந்த இடங்களில் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் ராணுவம் கூறியது.

மேற்கு ஈரானை தாக்கும் இஸ்ரேல்: இதனிடையே, மேற்கு ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது செவ்வாய்க்கிழமை இரவு "பல விரிவான தாக்குதல்களை" நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையில், "இந்த தாக்குதல்களின் போது, ​​ஈரானில் உள்ள டஜன் கணக்கான ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதல் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. மேலும், மேற்கு ஈரானில் தரையிலிருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணைகள் மற்றும் யுஏவி சேமிப்பு தளங்கள் தாக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x