Last Updated : 17 Jun, 2025 04:31 PM

2  

Published : 17 Jun 2025 04:31 PM
Last Updated : 17 Jun 2025 04:31 PM

இஸ்ரேல் - ஈரான் போர்: எரியும் தீயில் ட்ரம்ப் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங்: இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வலியுறுத்தி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தெஹ்ரானின் மையப்பகுதியில் இருந்து 3 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலும் எச்சரித்தது. நேற்று இரவு முதலே ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இந்த எச்சரிக்கையை அந்நாடு வெளியிட்டது.

இந்நிலையில், ட்ரம்பின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ​​சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், "தீயை மூட்டுவது, எண்ணெய் ஊற்றுவது, அச்சுறுத்தல்களை விடுப்பது, மென்மேலும் அழுத்தத்தை அதிகரிப்பது ஆகியவை நிலைமையின் தீவிரத்தை குறைக்க உதவாது. மாறாக, மோதலை தீவிரப்படுத்தி விரிவுபடுத்தும். இஸ்ரேல் மீது சிறப்பான செல்வாக்கை கொண்டிருக்கும் நாடுகள், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பதற்றங்களைத் தணிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மோதல் விரிவடைந்து பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலில் வசிக்கும் சீனர்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள சீனத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேலில் உள்ள சீன நாட்டினர் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இஸ்ரேலை விட்டு வெளியேற நினைவூட்டுகிறது.

தரை மார்க்கமாக எல்லையை கடக்கவும், ஜோர்டன் வழியாக வெளியேறவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பொதுமக்களின் சொத்துகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. மேலும் பாதுகாப்பு நிலைமையும் மிகவும் மோசமாகி வருகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x