Published : 16 Jun 2025 10:57 PM
Last Updated : 16 Jun 2025 10:57 PM
இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது என்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாடு 2025 கனடாவில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தப் போரில் ஈரான் வெற்றி பெறாது என்று நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மிகவும் தாமதமாகிவிடும் முன்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ஜி7 மாநாடு என்பது ஜி8 மாநாடாக ஆக இருந்தது. ஆனால் பராக் ஒபாமாவும் ட்ரூடோ என்ற நபரும் ரஷ்யாவை இதில் சேர்க்க விரும்பவில்லை. அது ஒரு மாபெரும் தவறு என்று நான் கூறுவேன். ஏனென்றால் ரஷ்யா இங்கே இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது. அதே போல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது என்று நான் நினைக்கிறேன்.
பைடன் 2 கோடி மக்களை எங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதித்தார். அதில் பெரும்பாலான மக்கள் மோசமான கொலையாளிகள், கும்பல்களைச் சேர்ந்தவர்கள், சிறைகளில் இருந்து வந்தவர்கள். அந்த மக்களில் பெரும்பாலோர் ஜனநாயகக் கட்சியினர் ஆளும் நகரங்களில் உள்ளனர். அவர்கள் அந்த மக்களை ஓட்டுக்காக பயன்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை’ இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் நாட்டில் உள்ள ராணுவ மையங்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கி வருகிறது ஈரான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT