Last Updated : 16 Jun, 2025 05:01 PM

 

Published : 16 Jun 2025 05:01 PM
Last Updated : 16 Jun 2025 05:01 PM

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் லேசான சேதம்

டெல் அவிவ்: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரக கட்டிடம் சிறிய அளவிலான சேதத்தை சந்தித்ததாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி உறுதிப்படுத்தினார்.

ஈரான் நாட்டில் உள்ள ராணுவ மையங்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கி வருகிறது ஈரான். இன்று டெல் அவிவ் மீது பல ஏவுகணைகள் பறந்து செல்வதும், ஜெருசலேம் நகரில் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்பதும் அங்கிருந்து வெளியாகும் வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளன. அதேபோல இன்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் டெல் அவிவ் நகரில், அமெரிக்க தூதரகத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. மக்கள் அடர்த்தியான அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்டிடங்களும் அழிக்கப்பட்டன.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி வெளியிட்ட அறிவிப்பில், “டெல் அவிவ் தூதரகக் கிளைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதால் சில சிறிய சேதங்கள் ஏற்பட்டன, ஆனால் அமெரிக்க பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. தற்போதைய பாதுகாப்பு நிலைமை காரணமாக, முன்னெச்சரிக்கையாக டெல் அவிவில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் ஜெருசலேமில் உள்ள தூதரகம் இன்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டிருக்கும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x