Last Updated : 16 Jun, 2025 02:28 PM

 

Published : 16 Jun 2025 02:28 PM
Last Updated : 16 Jun 2025 02:28 PM

ஈரானில் மாணவர்கள் தவிப்பு: இந்தியர்களை பாதுகாக்க தூதரகம் தீவிர நடவடிக்கை

தெஹ்ரான்: ஈரான் முழுவதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய மருத்துவ மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். ஈரானில் தாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை ஈரானுக்குள்ளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. மேலும், விரைவில் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இங்குள்ள பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சில மாணவர்கள் ஈரானுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். பிற சாத்தியமான விருப்பங்களும் பரிசீலனையில் உள்ளன. அவ்வப்போது புதிய தகவல்களை பகிரப்படும்" என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதி பேர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவம் மற்றும் பிற தொழில் முறை படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குறைந்த செலவு மற்றும் ஒத்த கலாச்சார சூழல் காரணமாக காஷ்மீர் மாணவர்கள் பொதுவாக ஈரானிய பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்கிறார்கள். தெஹ்ரான், ஷிராஸ் மற்றும் கோம் போன்ற நகரங்களில் இந்திய மாணவர்கள் பரவியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், ஈரானில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு: இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எனவே, ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள பிரத்யேக டெலிகிராம் குழுவில் சேருமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல, ஈரானில் உள்ள இந்தியர்கள், தூதரகத்தை தொடர்புகொள்ள அவசர உதவி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அச்சத்தில் மாணவர்கள்: மோதல் காரணமாக ஈரானின் வான்வெளி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் தங்கி மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வர முடியாத சூழல் நிலவுகிறது. எனவே மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து ஏஎன்ஐ-யிடம் பேசிய தெஹ்ரானில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் இம்திசல் மொஹிதின், “எங்களில் பெரும்பாலானோர் பயந்து விடுதியின் உள்ளேயே இருக்கிறோம். இது எவ்வளவு காலம் தொடரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு பலத்த வெடிச்சத்தம் கேட்டு விழித்தெழுந்து அடித்தளத்திற்கு விரைந்தேன். அதன் பிறகு நாங்கள் தூங்கவில்லை.

மாணவர் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு அடித்தளத்திற்குள் நாங்கள் சிக்கிக்கொண்டோம். ஒவ்வொரு இரவும் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கிறது. குண்டுவெடிப்புகளில் ஒன்று வெறும் 5 கிமீ தொலைவில் இருந்தது. நாங்கள் மூன்று நாட்களாக தூங்கவில்லை" என்று கூறினார்.

நிலைமை மோசமடைந்ததால் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ள ஷாஹித் பெஹெஷ்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் மொஹிதினும் ஒருவர். அவர் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவைச் சேர்ந்தவர்.

‘உயிர் பிழைத்தால் போதும்..’ - இந்த பயம் தெஹ்ரானுக்கு மட்டுமல்ல மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. கெர்மன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் பைசான் நபி கூறுகையில், “இன்று எங்கள் நகரத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டோம். தெஹ்ரானில் உள்ள எனது நண்பர்கள் பீதியடைந்துள்ளனர். 3-4 நாட்களுக்கு குடிநீரை சேமித்து வைக்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது எவ்வளவு மோசமானது.

எனக்கு என் பெற்றோரிடமிருந்து ஒரு நாளைக்கு 10 அழைப்புகள் வருகின்றன. இணையம் மிகவும் மெதுவாக இருப்பதால், என்னால் விரைவாக ஒரு வாட்ஸ்அப் செய்தியைக் கூட அனுப்ப முடியவில்லை. நாங்கள் இங்கு மருத்துவர்களாக மாற வந்தோம். இப்போது நாங்கள் உயிருடன் இருக்க முயற்சிக்கிறோம்” என்ற பைசான் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ஆவார்.

தெஹ்ரானில் உள்ள ஈரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மித்ஹாட், “இந்திய தூதரகத்தின் செய்திகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை நம்பியிருக்கிறோம். நிலைமை மோசமடைவதற்கு முன்பு எங்களை பாதுகாப்பாக வெளியேற்றுமாறு இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தூதரகம் உதவி எண்களைப் பகிர்ந்துள்ளது மற்றும் தொடர்பில் உள்ளது. ஆனால் நாங்கள் பயந்துவிட்டோம், வீட்டிற்குச் செல்ல வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x